இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, போரிவலி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட மசாலா தோசைக்குள் இறந்த எலி இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அந்த ஓட்டலின் உணவு வணிக உரிமத்தை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இடைநிறுத்தியுள்ளது.
அமித் திரிவேதி என்பவர் தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் மகனுடன் தென்னிந்திய உணவு உண்பதற்காக குறித்த ஓட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் மைசூர் மசாலா தோசையை ஆர்டர் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தோசையின் சில பகுதியை சாப்பிட்ட பின்னர், உணவில் வித்தியாசமான ஒன்று இருப்பதை அவர் கவனித்துள்ளார். அதனை பரிசோதித்தபோது, உணவுக்குள் சிறிய இறந்த எலி இருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த திரிவேதி, போரிவலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் இந்த முறைப்பாடு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த ஓட்டலின் உணவு வணிக உரிமத்தை FDA இடைநிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டே தலைமையில் மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முண்டே பொறுப்பேற்ற பின்னர், உணவகங்கள், ஓட்டல்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள், பால் பண்ணைகள் உள்ளிட்ட பல்வேறு உணவு வணிக நிறுவனங்களில் ஆய்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
